Zephaniah 2
1விரும்பப்படாத தேசமே, கட்டளையிடுவதற்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோவதற்குமுன்னும், கர்த்தருடைய கடுங்கோபம் உங்கள்மேல் இறங்குவதற்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருவதற்குமுன்னும், 2நீங்கள் உங்களை உணர்ந்து ஆராய்ந்து சோதியுங்கள். 3தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள். 4காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும். 5கடற்கரை குடிமக்களாகிய கிரேத்தியருக்கு ஐயோ! பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடி உன்னை அழிப்பேன். 6கடற்கரை தேசம் மேய்ப்பர்கள் தங்கும் குடிசைகளும் ஆட்டுத் தொழுவங்களுமாகும். 7அந்த தேசம் யூதா சந்ததியாரில் மீதியாக இருப்பவர்களுக்குச் சொந்தமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே மாலையிலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பை மாற்றுவார். 8மோவாப் செய்த பழிச்சொல்லையும், அம்மோனியர்கள் என் மக்களை இகழ்ந்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச்சொன்ன தூஷணங்களையும் கேட்டேன். 9ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோனியர்களின் தேசம் கொமோராவைப்போலுமாகி, நெருஞ்சிமுள் படரும் இடமும், உப்புப்பள்ளமும், நிரந்தர பாழுமாயிருக்கும்; என் மக்களில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார். 10அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் மக்களுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி அவர்களை ஏளனம் செய்ததினால், இது அவர்கள் அகங்காரத்திற்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும். 11கர்த்தர் அவர்கள்மேல் அதிகாரமுள்ளவராக இருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகச்செய்வார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல அன்னியமக்களும் அவரவர் தங்கள் தங்கள் இடத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள். 12எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள். 13அவர் தமது கையை வடதேசத்திற்கு விரோதமாக நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்திரத்தைப்போல வறட்சியுமான இடமாக்குவார். 14அதின் நடுவில் மந்தைகளும் வகைவகையான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய மலையுச்சிகளின்மேல் நாரையும் கோட்டானும் இரவில் தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் வெறுமை இருக்கும்; கேதுருமரத் தளங்களைத் திறப்பாக்கிப்போடுவார். நான்தான், என்னைத் தவிர வெறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, பொறுப்பில்லாமல் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகங்கள் வசிக்குமிடமாகப் போய்விட்டதே! அதின் வழியாகப் போகிறவன் எவனும் தன் கைகளைத்தட்டி ஏளனம் செய்வான். 15
Copyright information for
TamULB