‏ Job 9

1அதற்கு யோபு மறுமொழியாக: 2ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; தேவனுக்கு முன்பாக மனிதன் நீதிமானாயிருப்பதெப்படி? 3அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு பதில் சொல்லமாட்டானே.

4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்? 5அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார். 6பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார்.

7அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார். 8அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர். 9அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், அறுமீனையும், தெற்கு மண்டலங்களையும் உண்டாக்கினவர்.

10ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். 11இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைப் பார்க்கமுடியவில்லை; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியவில்லை. 12இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?

13தேவன் தம்முடைய கோபத்தை நிறுத்தமாட்டார்; ஒருவருக்கொருவர் துணைநிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும். 14இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், அவருடன் வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்? 15நான் நீதிமானாயிருந்தாலும் அவருடன் வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்காகக் கெஞ்சுவேன்.

16நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும், அவர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் என்று நம்பமாட்டேன். 17அவர் புயலினால் என்னை முறிக்கிறார்; காரணமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார். 18நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார்.

19பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பக்கத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்? 20நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.

21நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; என் வாழ்க்கையை வெறுப்பேன். 22ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார். 23வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து சிரிக்கிறார். 24உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், வேறு யார் இதைச் செய்கிறார்.

25என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது; அவைகள் நன்மையைப் பார்க்காமல் பறந்துபோகும். 26அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.

27என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால், 28என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக நினைக்கமாட்டீர் என்று அறிவேன். 29நான் பொல்லாதவனாயிருந்தால், வீணாகப் போராடவேண்டியது என்ன?

30நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளை சுத்தம்செய்தாலும், 31நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் உடையே என்னை அருவருக்கும்.

32நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனிதன் அல்லவே. 33எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே.

34அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக. அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.

35

Copyright information for TamULB