Mark 1
1தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம். 2இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; 3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி; 4யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான். 5அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். 6யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான். 7அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை. 8நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான். 9அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். 10அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார். 11அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. 12உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார். 13அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள். 14யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து: 15காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார். 16அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார். 17இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். 18உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். 19அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, 20உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். 21பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார். 22அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். 23அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான். 24அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான். 25அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார். 26உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது. 27எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 28எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது. 29உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள். 30அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள்; உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள். 31அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். 32மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். 33பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள். 34பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை. 35அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். 36சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய், 37அவரைப் பார்த்தபோது: எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள். 38அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி; 39கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார். 40அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான். 41இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார். 42இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான். 43அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு; 44ஆனாலும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுகமானதினால், மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள். 45
Copyright information for
TamULB