‏ Matthew 2

1ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, 2யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைத் தொழுதுகொள்ள வந்தோம் என்றார்கள். 3ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.

4அவன் பிரதான ஆசாரியர்கள், மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். 5அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்: 6யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.

7அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து: 8நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான்.

9ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. 10அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.

11அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள். 12பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.

13அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். 14அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், 15ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

16அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

17புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாமல் இருக்கிறாள் என்று, 18எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.

19ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி: 20நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள் என்றான். 21அவன் எழுந்து பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.

22ஆனாலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய், நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். நசரேயன் எனப்படுவார் என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

23

Copyright information for TamULB